வயிற்றில் உள்ள கருவுக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை உண்டு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
- திருமணமாகாத 20 வயது இளம் ஒருவர் தனது வயிற்றில் உள்ள 27 வார கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
- கருவை சுமக்கும் பெண் 20 வயதே ஆன திருமணமாகாத இளம்பெண் என்பதால் இந்த கருவால் சமுதாயத்தை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருக்கிறார் என்று வாதிடப்பட்டது
திருமணமாகாத 20 வயது இளம் ஒருவர் தனது வயிற்றில் உள்ள 27 வார கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
கடந்த மே 3 ஆம் தேதி அந்த மனு மீதான விசாரணையின்போது கருவைக் கலைக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுத்தது. மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி 24 வாரங்களுக்குள் மட்டுமே கருவைக் கலைக்க சட்டப்படி அனுமதி உள்ளது என்றும் இந்த வழக்கில் மனுத்தாரரின் கரு 27 வாரங்கள் நிறைந்தது என்பதால் சட்டப்படி கருவைக் கலைக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த பெண் உச்சநீதிமன்றத்தை நாடினார். இதன் மீதான விசாரணை இன்று (மே 15) உச்சநீதிமன்ற அமர்வில் நடந்தது. அப்போது பெண்ணின் வயிற்றில் உள்ள கருவுக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை உள்ளது என்றும் அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் மனுதாரரிடம் கேள்வி எழுப்பி கருவைக் கலைக்க அனுமதி மறுத்துள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் பேசிய வழக்கறிஞர், கருவை சுமக்கும் பெண் 20 வயதே ஆன திருமணமாகாத இளம்பெண் என்பதால் இந்த கருவால் சமுதாயத்தை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருக்கிறார் என்று வாதிட்டது குறிப்பிடத்தக்கது.