கல்லூரி மாணவரை ராகிங் செய்து கொடூரமாக தாக்கிய 20 பேர் கும்பல்- போலீசார் விசாரணை
- தனது மகனை ராகிங் செய்து தாக்கிய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
- 20 மாணவர்கள் கும்பலாக சேர்ந்து ராகிங் செய்து தாக்கிய சம்பவம் கோழிக் கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் புள்ளல்லூரை சேர்ந்தவர் முகமது. இவரது மகன் முகமது மிதுலாஜ். இவர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று மாணவர் முகமது மிதுலாஜ் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அப்போது அவரை, அதே கல்லூரியில் படிக்கும் 20 மாணவர்கள் சேர்ந்து ராகிங் செய்துள்ளனர். மாணவர் அணிந்திருந்த உடை மற்றும் சிகை அலங்காரத்தை குறிப்பிட்டு கேலி-கிண்டலும் செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறியபடி செய்வதற்கு மாணவர் முகமது மிதுலாஜ் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், முகமது மிதுலாஜை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாணவரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர் முகமது மிதுலாஜ் ராகிங் செய்து கொடூரமாக தாக்கப்பட்டது குறித்து, குன்ன மங்கலம் போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை புகார் செய்தார்.
அனர் தனது புகாரில், தனது மகனை 20 மாண வர்கள் கும்பலாக சேர்ந்து ராகிங் செய்தது மட்டு மின்றி, கொடூரமாக தாக்கியுள்ளனர். அதில் எனது மகனுக்கு கண் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும், மூக்கில் எலும்பு சேதமடைந்து இருப்பதாகவும் கூறியுள்ள அவர், தனது மகனை ராகிங் செய்து தாக்கிய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ஒருவரை, 20 மாணவர்கள் கும்பலாக சேர்ந்து ராகிங் செய்து தாக்கிய சம்பவம் கோழிக் கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.