யுபிஐ டிஜிட்டல் வணிகத்தில் கால்பதிக்கும் அதானி .. கூகுள் - ரிலையன்ஸை ஓவர்டேக் செய்வாரா?
- அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக டிஜிட்டல் வணிகத்தில் அதானி குழுமம் களமிறங்குவது வணிக உலகில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
- பிரத்தியேக கிரெடிட் கார்டு சேவைகளையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமம் ஆன்லைன் வணிகம் மற்றும் யுபிஐ பரிவர்த்தனை சேவைகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது ஆன்லைன் வணிகம் மற்றும் பரிவர்த்தனைகளில் முதன்மையாக விளங்கும் கூகுள் நிறுவனம் மற்றும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக டிஜிட்டல் வணிகத்தில் அதானி குழுமம் களமிறங்குவது வணிக உலகில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக பொது டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) ஆகிவற்றில் பரிவர்த்தனைக்கான உரிமத்தைப் பெற அதானி குழுமம் விண்ணப்பிக்க உள்ளது. அதைத்தொடர்ந்து பிரத்தியேக கிரெடிட் கார்டு சேவைகளையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் கீழ் இயங்கும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க் (ONDC) உடன் இணைந்து ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளை வழங்க அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதானி குழுமத்தின் பிற வணிகங்களான எரிவாயு மற்றும் மின் வணிக நுகர்வோர்களையும், விமான பயணிகளையும் அதன் ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்தச் செய்யும் என்று தெரிகிறது.