அதானி குழுமம் மீதான லஞ்சப் புகாரில் விசாரணையை தீவிரப்படுத்திய அமெரிக்கா?
- அசுர் பவர் நிறுவனம், சாதகமான நடவடிக்கைகளுக்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு.
- இது தொடர்பாக அமெரிக்கா விரிவான விசாரணையை தீவிரப்படுத்தியதாக தகவல்.
அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அசுர் பவர் நிறுவனம், சாதகமான நடவடிக்கைகளுக்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்காவின் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இது தொடர்பாக அமெரிக்கா அதானி குழுமம் மற்றும் அதன் நிறுவனரான கவுதம் அதானி மீது விரிவான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், "எங்கள் சேர்மனுக்கு எதிராக எந்தவொரு விசாரணையும் நடைபெற்றது குறித்து நாங்கள் அறியவில்லை" என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், "நிர்வாகத்தில் உயர்ந்த தரத்துடன் அதானி குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு சட்டங்களுக்கு நாங்கள் உட்பட்டு முழுமையாக இணைந்து செயல்பட்டு வருகிறோம்" எனவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
ப்ரூக்ளின் மற்றும் வாஷிங்டன் நீதித்துறை தொடர்பான பிரிதிநிதிகள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். அசுர் பவர் நிறுவனமும் கருத்து தெரிவிக்கவில்லை.
அதானி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை காரணமாக இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.