இந்தியா

2 மாதங்களில் 21 முறை.. விதிமீறலில் சிக்கிய அரசு வாகனம்.. ரூ. 18,000 அபராதம் விதித்த போலீஸ்..!

Published On 2024-08-07 06:08 GMT   |   Update On 2024-08-07 06:08 GMT
  • வாகனம் அம்மாநிலத்தில் 21 முறை விதிமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
  • ஜூலை 14 அன்று அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் அரசு வாகனத்திற்கு ரூ.18 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு இ சல்லான் முறையில் அபராதம் வசூலிக்கும் திட்டம் கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக அமலில் இருந்து வருகிறது.

அந்த வரிசையில், அம்மாநிலத்தின் அரசு பயன்பாட்டிற்காக KA-01-G-6601 என்ற பதிவு எண் கொண்ட வாகனம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த வாகனம் அம்மாநிலத்தில் 21 முறை விதிமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த வாகனத்திற்கு அபராதத் தொகையாக ரூ.18 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மீறல்களும் 2 மாதங்களுக்குள் (ஜூலை, ஆகஸ்ட்) பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்களுக்கு ஒவ்வொரு வாகனத்திற்கும் தலா ரூ. 1,000 அல்லது ரூ. 500 விதிக்கப்படுகிறது.

கர்நாடக காவல்துறையால் தொடங்கப்பட்ட இ-சலான் (https://echallan.ksp.gov.in/) இணையதளத்தின் தரவுகளின்படி, இந்த வாகனம் பல முறை விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

ஜூலை 14 அன்று அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில், சித்தலிங்கபுராவில் ஜூலை 18 அன்று சீட்பெல்ட் அணியாமல் சென்றது, மதநாயக்கனஹள்ளி மற்றும் கெஜ்ஜலகெரே கேஎம்எஃப் போன்ற பல்வேறு இடங்களில் அதிவேகமாக சென்றது உட்பட பல விதிமீறல்கள் ஏற்படுத்தி இருக்கிறது.

இதே போன்று தொடர் விதிமீறல்கள், போக்குவரத்துச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் உள்ள குறைபாட்டை காட்டுகின்றன. மேலும் விதிமீறல்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

Tags:    

Similar News