கர்நாடகாவில் கூடுதல் மதுக்கடை திறக்க அரசு முடிவு
- 1000 மதுக் கடைகள் திறக்க கர்நாடக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.
- அரசின் இந்த முடிவுக்கு, மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக கலால் துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.
அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் உள்ள 379 எம்.எஸ்.ஐ.எல்., மதுக்கடைகளை புதிதாக ஏலம் விடுவது, உரிமம் புதுப்பிப்புக்கு 4 மடங்கு அதிகமாக கட்டணம் நிர்ணயிப்பது.
அதற்காக கலால் சட்டத்தில் திருத்தம் செய்வது, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி, 5 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராம பஞ்சாயத்தில் மதுபான கடை திறக்க கலால் உரிமம் வழங்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி, 3 ஆயிரம் மக்கள் தொகை உள்ள கிராம பஞ்சாயத்துகளில் உரிமம் வழங்குவது என மாற்றுவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பொதுவாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, 5 ஆயிரம் மக்கள் தொகை உள்ள கிராம பஞ்சாயத்துகளில் மதுபான கடைகள் திறக்கலாம் என உத்தரவு உள்ளது. இதை மனதில் வைத்து, 1000 மதுக் கடைகள் திறக்க கர்நாடக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.
இனிமேல் 3 ஆயிரம் மக்கள் தொகை என கொண்டு வந்தால், பல கிராம பஞ்சாயத்துகளில் கூடுதலாக கடைகள் திறக்கப்படும். அரசின் இந்த முடிவுக்கு, மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.