இந்தியாவில் காபியை விட சீப்பாக கிடைக்கும் 1 ஜிபி டேட்டா- புகைப்படத்தை பகிர்ந்த மத்திய அரசு
- நாட்டில் 117 கோடி மொபைல் இணைப்புகளும், 93 கோடி இணைய இணைப்புகளும் உள்ளன.
- பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணங்களை குறைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 1ஜிபி டேட்டாவின் விலையை, ஸ்ட்ரீட் கஃபேயின் விலைப்பட்டியலோடு ஒப்பிட்ட புகைப்படத்தை மத்திய தொலைத்தொடர்புத்துறை பகிர்ந்துள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காபி, டீ, லஸ்ஸி மற்றும் டோஸ்ட் ஆகியவற்றுடன் இந்தியாவில் 1 ஜிபி டேட்டாவின் விலையை ஒப்பிடும் ஒரு தெருவோர கஃபேயின் படத்தை தொலைத்தொடர்புத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், "இந்தியாவில் 1 ஜிபி டேட்டா ஒரு கப் காபியை விட மலிவானது" என்று எழுதப்பட்டுள்ளது.
சமீபத்தில், மக்களவையில் பேசிய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, நாட்டில் 117 கோடி மொபைல் இணைப்புகளும், 93 கோடி இணைய இணைப்புகளும் உள்ளன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் அழைப்பின் விலை 53 பைசா என்று கூறிய அவர், நாட்டில் உள்ள அனைத்து கட்டணங்களும் உலகிலேயே மிகக் குறைந்த கட்டணங்களில் ஒன்று. ஒரு ஜிபி டேட்டாவின் விலை ரூ.9.12க்கு உலகிலேயே மலிவான டேட்டா விலையை இந்தியா வழங்குகிறது என்று கூறியிருந்தார்.
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணங்களை குறைத்தது குறிப்பிடத்தக்கது.