இந்தியா

வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த பள்ளிப்பேருந்து- உள்ளே இருந்தவர்களை கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்

Published On 2022-07-07 16:17 GMT   |   Update On 2022-07-07 16:17 GMT
  • குஜராத்தில் அடுத்த நான்கு நாட்கள் மேலும் தீவிரமாக மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தெற்கு பாகிஸ்தான் நிலவும் குறைந்த காற்றழுத்தம் மற்றும் தொடர்புடைய சூறாவளி சுழற்சி காரணமாக, தென்மேற்கு பருவமழை தற்போது குஜராத் மாநிலம் முழுவதும் தீவிரமாக உள்ளது. தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் அடுத்த நான்கு நாட்கள் மேலும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜாம்நகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தினுள் இருந்தவர்களை அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு பின் கயிறு கட்டி மீட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கனமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கட்ச் மாவட்டத்தில் உள்ள மாண்ட்வி மற்றும் மஸ்கா பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News