ஆடு திருடியதாக சந்தேகம்: வாலிபர்களை தலைகீழாக தொங்கவிட்டு அடியில் தீ வைப்பு
- பெல்லாரம் பள்ளி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- கொமுராஜூலா ராமலு, அவரது மனைவி ஸ்வரூபா, மகன் சீனிவாஸ் ஆகிய 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம், மஞ்சிரியாலா மாவட்டம், மந்தமரியைச் சேர்ந்தவர் கொமுராஜூலா ராமுலு.
இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது, ஆட்டு மந்தையில் இருந்து ஒரு ஆடு காணாமல் போனது.
இதனால் அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த தேஜா மற்றும் அவரது நண்பரான பழங்குடியின வகுப்பை சேர்ந்த சிலுமுலா கிரண் ஆகியோரிடம் விசாரித்தார்.
பின்னர், இருவரையும் அவரின் மாட்டு தொழுவத்திற்கு அழைத்து சென்றார். வாலிபர்களை அவரது குடும்பத்தினர் சரிமாரியாக தாக்கி கால்களில் கயிற்றை கட்டி கொட்டகையில் தலைகீழாக தொங்க விட்டனர். மேலும் கீழே தரையில் தீ மூட்டினர்.
தீ சுட்டதால் வலிதாங்க முடியாமல் இருவரும் அலறி துடித்தனர். இவ்வாறு அவர்கள் சித்தரவதை செய்தது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெல்லாரம் பள்ளி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து கொமுராஜூலா ராமலு, அவரது மனைவி ஸ்வரூபா, மகன் சீனிவாஸ் ஆகிய 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.