மாநிலங்களவை தேர்தல் - கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏ காங்கிரசில் இருந்து நீக்கம்
- அரியானா மாநிலத்தின் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.
- சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவுக்கு பாஜக, ஜனாயக் ஜனதா கட்சிகள் ஆதரவளித்தன.
சண்டிகர்:
அரியானாவில் மாநிலங்களவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய் அக்கட்சியின் வேட்பாளர் அஜய் மாக்கானுக்கு வாக்களிக்காமல் சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவுக்கு வாக்களித்தார். கார்த்திகேய சர்மாவுக்கு பா.ஜ.க, ஜனாயக் ஜனதா கட்சிகள் ஆதரவளித்துள்ளன.
அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற 31 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய நிலையில், குல்தீப் பிஷ்னோய் மாற்றி வாக்களித்துள்ளார். மற்றொருவரது வாக்கு ரத்து செய்யப்பட்டது. இதனால் அரியானாவில் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில், அரியானாவில் கட்சி மாறி வாக்களித்த குல்தீப் பிஷ்னோயை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர் பதவி உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குல்தீப் பிஷ்னோய் நீக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.