இந்தியா

கர்நாடகாவில் பா.ஜனதா உடன் இணைந்து செயல்படுவோம்: குமாரசாமி

Published On 2023-07-22 01:06 GMT   |   Update On 2023-07-22 01:06 GMT
  • பா.ஜனதாவுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம்
  • கட்சியை ஒழுங்கமைக்க குழு அமைக்க முடிவு செய்துள்ளோம்

எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டம் கர்நாடகாவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் எங்களை எதிர்க்கட்சிகளின் ஒரு அங்கமாக நினைக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் கர்நாடகாவில் பா.ஜனதாவுடன் இணைந்து செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ''சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்களும், பா.ஜனதாவும் எதிர்க்கட்சிகள் என்பதை ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். தற்போது நாங்கள் மாநில நலனுக்காக இணைந்து செயல்பட இருக்கிறோம். இன்று காலையில் (நேற்று) கூட எங்களுடைய எம்.எல்.ஏ.-க்கள் இதை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதித்தோம்'' என்றார்.

மேலும், தேவகவுடா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தலைவர்களின் கருத்துகளை கேட்டபிறகு, 31 மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக குரல் கொடுக்கவும், கட்சியை ஒழுங்கமைக்கவும் அனைத்து சமுதாயத்தினரையும் உள்ளடக்கிய குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மேற்கோள்காட்டி பாராளுமன்ற தேர்தலுக்கான பணியை தொடங்கிவிட்டீர்களா? என்ற கேள்விக்கு,

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் உள்ளன. தேர்தல் வரும்போது பார்க்கலாம். தற்போது கட்சியை ஒழுங்கமைப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு முடிவும் எடுக்க தேவகவுடா எனக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளார்.

கர்நாடக மாநில எம்.எல்.ஏ. தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 135 இடங்களிலும், பா.ஜனதா 66 இடங்களிலும் வெற்றி பெற்றன.

Tags:    

Similar News