இந்தியா

கருவில் உள்ள குழந்தைக்கு 1½ நிமிடங்களில் இதய அறுவை சிகிச்சை- எய்ம்ஸ் டாக்டர்கள் சாதனை

Published On 2023-03-15 07:05 GMT   |   Update On 2023-03-15 10:14 GMT
  • கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
  • கருவிலேயே குழந்தைக்கு இதய சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் முடிவு செய்தனர்.

புதுடெல்லி:

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதான கர்ப்பிணி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே மூன்று முறை கரு கலைந்திருந்தது.

4-வது முறையாக கர்ப்பம் அடைந்த அப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதுபற்றி பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் இந்த குழந்தையை பெற்றெடுக்க விரும்பினர்.

இதையடுத்து கருவிலேயே குழந்தைக்கு இதய சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

மிகவும் சவாலான இந்த அறுவை சிகிச்சையை மகப்பேறு மருத்துவதுறையுடன் இணைந்து இதயவியல் மற்றும் இதய மயக்க மருந்துத்துறை டாக்டர்கள் குழுவினர் செய்தனர்.

அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலின் கீழ் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாயின் அடி வயிற்றில் துளையிட்டு மெல்லிய குழாய் செலுத்தப்பட்டது.

அது கருவில் உள்ள குழந்தையின் இதயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதிலிருந்து சிறிய பலூன் வடிகுழாயை பயன்படுத்தி, திராட்சை அளவு கொண்ட இதயத்தில் இருந்து அடைப்பு வெற்றிகரமாக நீக்கப்பட்டது.

இந்த சிகிச்சையை 90 வினாடிகளில் செய்து முடித்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயும், குழந்தையும் நன்றாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மூத்த டாக்டர் ஒருவர் கூறும்போது, தாயின் அடி வயிற்றின் வழியாக கருவில் உள்ள குழந்தையின் இதயத்தில் ஒரு ஊசியை செலுத்தி அடைப்பை சரி செய்தோம். குழந்தையின் இதயம் நன்றாக வளரும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் குழந்தை பிறக்கும் போது இதய நோய் தீவிரம் குறைவாக இருக்கும். இது போன்ற ஒரு செயல் முறை மிகவும் சவாலானது. ஏனென்றால் அது கருவின் உயிருக்கு கூட ஆபத்தாகலாம்.

இந்த சிகிச்சை மிக விரைவாக செய்யப்பட வேண்டும். ஏனென்றால் இதயத்தின் பெரிய அறையை துளைக்க வேண்டி இருந்தது ஏதாவது தவறு நடந்தால் குழந்தைக்கு ஆபத்தாக முடியும். இந்த சிகிச்சையை நாங்கள் விரைவாக செய்து முடித்தோம் என்றார்.

Tags:    

Similar News