தொடர் கனமழை: டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி- வீடியோ
- 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக டெல்லி முழுக்க தண்ணீர் குளம் போன்று தேங்கி நிற்கிறது. வாகனங்கள் நீரில் மூழ்கின.
கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனைய மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனைய செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டன.
இதேபோன்று டெல்லியை சுற்றியுள்ள ஜங்புறா, ஆர்.கே. ஆஷ்ரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
டெல்லியின் வசந்த விகார் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டிடத்தில் பணியாற்றிய பணியாளர்கள் அங்கிருந்த பள்ளத்தில் விழுந்தனர். இவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
டெல்லி முழுக்க கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.