எனக்கு இந்த உதவியாவது செய்யுங்கள்.. எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கண்ணீர்
- மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்துள்ளன.
- குகி மற்றும் மைதேயி இன மக்கள் இனி ஒன்றாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளது என்று அந்த பெண் கூறினார்.
மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வன்முறையின்போது இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊருக்குள் இழுத்து வந்தனர். அவர்களின் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொந்தளிப்பான சூழ்நிலை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையில், மணிப்பூரில் உள்ள கள நிலவரம் குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான, இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (ஐ.என்.டி.ஐ.ஏ.) கட்சிகளின் எம்.பி.க்கள் இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்னர். இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் கவுரவ் கோகாய், திரிணாமுல் சார்பில் சுஷ்மிதா தேவ், திமுகவின் கனிமொழி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் குமார் ஜா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கலவர கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் தாயாரை, எதிர்க்கட்சிகளின் எம்பி.க்கள் கனிமொழி மற்றும் சுஷ்மிதா தேவ் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, அந்த பெண் தன் மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீர்மல்க கூறியிருக்கிறார். கலவரத்தின்போது கொல்லப்பட்ட தனது மகன் மற்றும் கணவரின் உடல்களைப் பார்க்க எனக்கு உதவுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மோதலில் ஈடுபடும் இரண்டு சமூகங்களான குகி மற்றும் மைதேயி இன மக்கள் இனி ஒன்றாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளது என்றும் அந்த பெண் கூறினார்.