கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா: வீடியோ வெளியானதால் போராட்டத்தில் மாணவிகள்- ஆந்திராவில் பரபரப்பு
- கல்லூரியில் நடந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நேற்றிரவு முதல் இன்று காலை வரை போராட்டம் நீடித்தது.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவிகள் விடுதி கழிவறையில் (Washroom) ரகசிய கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கேமராவில் மாணவிகள் வீடியோக்கள் ரகசியமாக பதிவாகி இருந்ததாகவும், பின்னர் அவை கசிந்து சில மாணவர்களுக்கு விற்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா மண்டலம் குட்லவல்லேரு பொறியியல் கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடுதி கழிவறையில் (Washroom) இருந்த கேமராவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை போராட்டம் நீடித்தது. தங்களுக்கு நீதி வேண்டும் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக, பிடெக் இறுதியாண்டு படிக்கும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மூத்த மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
பெண்கள் விடுதி கழிவறையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்ததாகவும், சில மாணவர்கள் இந்த வீடியோக்களை கைதான மாணவனிடம் இருந்து வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து பெண்கள் கழிவறைக்கு செல்லவே பயப்படுகின்றன. அங்கே செல்வதையே தவிர்த்து விடுகின்றன. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பது யார்? என்பதுதான் மாணவிகளின் கேள்வியாக உள்ளது.