29-ந்தேதி வரை சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க தடை- ஐகோர்ட்டு உத்தரவு
- 29-ந்தேதி விசாரணை நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
- அன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடைபெறும்.
முதல்-மந்திரி சித்தராமையா மீதான முடா நில முறைகேடு வழக்கில் விசாரணை நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்த விசாரணை 29-ந்தேதி நடைபெறும். அதுவரை இந்த உத்தரவு தொடரும் என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) சார்பில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் கடந்த 2011-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் ஒதுக்கப்பட்டன.
இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதனால் முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடரவும் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் சமூக ஆர்வலர்கள் டி.ஜே. ஆபிரகாம், சினேகமயி கிருஷ்ணா, பிரதீப்குமார் ஆகியோர் கடிதம் வழங்கினர்.
அதன் அடிப்படையில் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி கவர்னர் கடந்த 17-ந்தேதி உத்தரவிட்டார்.
முன்னதாக மூடா நில முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் முறைப்படி அனுமதி வழங்காத நிலையில், டி.ஜே. ஆபிரகாம் மற்றும் சினேகமயி கிருஷ்ணா ஆகிய 2 பேரும், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய கோரி பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டிலும் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில், சினேகமயி கிருஷ்ணா தொடர்ந்த மனு மீதான தீர்ப்பு வருகிற இன்று கூறப்படும் என்று நீதிபதி அறிவித்தார். டி.ஜே. ஆபிரகாம் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வருகிற 21-ந்தேதி (நாளை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வழக்கு தொடர அனுமதித்த கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா சார்பில் அவரது வக்கீல் ரவிவர்மா குமார் 'ரிட்' மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரினார். அப்போது நீதிபதி நாகபிரசன்னா, ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு வக்கீல் ரவிவர்மா குமார், மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் சமூக ஆர்வலர் சித்தராமையாவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் வருகிற 20-ந்தேதி (நாளை) தீர்ப்பு வருகிறது.
எனவே இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
ஐகோர்ட்டில் நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணை தொடங்கியது. அப்போது முதல்-மந்திரி சித்தராமையா சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வியும், கவர்னர் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வக்கீல் துஷார் மேத்தாவும் ஆஜராகினர். முதலில் சித்தராமையா வக்கீல் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். அவர் தனது தரப்பு வாதத்தை விளக்கமாக எடுத்து வைத்தார். அவர் வாதிடுகையில் கூறியதாவது:-
கவர்னர் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டு முதல்-மந்திரி மீது வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளார். மந்திரிசபையின் முடிவையும் அவா் நிராகரித்துள்ளார். இது அரசியல் சாசனத்தின் 163-வது அட்டவணையை மீறுவது ஆகும். அரசியல் காரணங்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்கும் உள்நோக்கத்தில் கவர்னர் முடிவு எடுத்துள்ளார். இதுபோன்ற வழக்குகளில் கவர்னர் மந்திரிசபையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர். ஆனால் அதற்கு பதிலாக வழக்கின் உண்மை தன்மையை ஆராயாமல் 2 பக்க விளக்கத்துடன் வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளார்.
கவர்னரிடம் பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன. ஆனால் அவர் முதல்-மந்திரிக்கு எதிரான புகாரை மட்டுமே தேர்ந்தெடுத்து அனுமதி அளித்துள்ளார். முடா முறைகேட்டில் முதல்-மந்திரிக்கு எந்த தொடர்பும் இல்லை. ஏனெனில் இது முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்றது. இதை கருத்தில் கொள்ளாமல் வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
தன்னை மந்திரிசபையின் முடிவு கட்டுப்படுத்தாது என்று கவர்னர் கூறியுள்ளார். மந்திரிசபையின் முடிவில் முதல்-மந்திரிக்கு தொடர்பு இல்லை. ஏனெனில் அவர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. புகார்களை தான் தன்னிச்சையாக ஆய்வு செய்ததாக கவர்னர் சொல்கிறார். பாதி உண்மை ஒரு பொய்யை விட அபாயகரமானது. மந்திரிசபையின் முடிவை மீறி அவர் முடிவு எடுத்திருந்தாலும், அதற்கு சரியான காரணம் இருக்க வேண்டும். அத்தகைய சரியான காரணத்தை கவர்னர் இதில் கூறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து கவர்னர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷார் மேத்தா வாதிடுகையில், "இந்த வழக்கில் முதல்-மந்திரியை பாதுகாக்கும் நோக்கத்தில் மந்திரிசபை முடிவு அமைந்துள்ளது. மந்திரிசபை முடிவின்படி கவர்னர் செயல்பட வேண்டும் என்றாலும், சில நேரங்களில் கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது.
அதன் அடிப்படையில் கவர்னர் முடிவு எடுத்து முதல்-மந்திரி மீது வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளார். அரசியல் சாசன அதிகாரத்தை கொண்ட கவர்னர் சட்டப்படி உத்தரவிட்டுள்ளார். அதனால் அவரது உத்தரவுக்கு தடை விதிக்க கூடாது. தேவைப்பட்டால் மனுதாரர், சிறப்பு கோர்ட்டை அணுகி விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரலாம்" என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, முதல்-மந்திரி மீதான ஊழல் வழக்கின் தீர்ப்பை வருகிற 29-ந் தேதி ஒத்திவைக்கும்படி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டார். மேலும் நீதிபதி கூறுகையில், "முடா வழக்கில் சிறப்பு கோர்ட்டு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. ஏனெனில் ஐகோர்ட்டில் முதல்-மந்திரியின் மனு மீது விசாரணை நடக்கிறது. இதன் மீதான அடுத்த விசாரணை நடைபெறும் வரை சிறப்பு கோர்ட்டு தனது தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும்" என்றார்.
இந்த ரிட் மனு மீதான அடுத்த விசாரணை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தற்போதைக்கு விலகியுள்ளது. அவருக்கு தற்காலிக நிவாரணமாக 10 நாட்களுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க தடை ஏற்படுள்ளது குறிப்பிடத்தக்கது.