இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் கொரோனா தொற்றால் பாதிப்பு
- பிரதமர் மோடியை சந்திக்கும் திட்டத்தை தள்ளி வைத்தார்.
- கடந்த 16ந் தேதி ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் அவர் பங்கேற்றிருந்தார்.
சிம்லா:
இமாச்சலப் பிரதேசத்தில் புதிய முதலமைச்சராக கடந்த 11ந் தேதி பதவியேற்ற சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் இதை தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்க சுக்விந்தர் சிங் திட்டமிட்டிருந்தார்.
இதையொட்டி அவருக்கு வழக்கமான கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பிரதமரை சந்திக்கும் திட்டத்தை தள்ளி வைத்த அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக கடந்த 16 ஆம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற ராகுல்காந்தியின் பாத யாத்திரையில் துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபாசிங் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 38 எம்எல்ஏக்களுடன் சுக்விந்தர் சிங்கும் பங்கேற்றிருந்தார்.
மேலும் கடந்த சில நாட்களாக அவரை, இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா மற்றும் அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.