இந்தியா

'நீங்களே வச்சிக்கோங்க'.. மத்திய அரசு நிதியை புறக்கணித்த இமாச்சல் அரசு.. முதல்வர் கூறிய பகீர் காரணம்

Published On 2024-07-28 06:59 GMT   |   Update On 2024-07-28 07:10 GMT
  • மாநில அரசானது தொழிற்பூங்கா அமைக்க இதுவரை ரூ.74.95 கோடி செலவிட்டுள்ளது
  • நிதியை ஏற்றால் தொழிலதிபர்களுக்கு இலவசமாக வழங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்

மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டிவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருவது தெரிந்ததே. இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா [Medical Device Park] அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திருப்பி அனுப்பியுள்ள ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு தங்கள் மாநிலத்தின் செலவிலேயே அதை அமைத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இதுதொடர்பாக இமாச்சலப் பிரதேச அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில அரசானது தொழிற்பூங்கா அமைக்க இதுவரை ரூ.74.95 கோடி செலவிட்டுள்ளது. எனவே மாநிலத்தின் விருப்பத்தின்படி, மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள ரூ.30 கோடியைத் திருப்பி அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்பூங்கா அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.350 கோடியாகும் 

இந்த அறிவிப்பு குறித்து பேசிய அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பேசுகையில், 265 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு வழங்கிய ரூ.30 கோடியை நாங்கள் ஏற்றால், இந்த வளாகத்தில் உள்ள நிலங்களைத் தொழிலதிபர்களுக்கு ஒரு சதுரடி 1 ரூபாய்க்கும், ஒரு யூனிட் மின்சாரம் 3 ரூபாய்க்கும், மற்ற அனைத்து வசதிகளையும் அடுத்த 10 வருடங்களுக்கு இலவசமாகவும் வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

எனவே நாங்களே எங்களது நிதியில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் அடுத்த 5 முதல் 7 வருடங்களில் மாநில அரசுக்கு ரூ.500 கோடி வரை லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News