இந்தியா

அரசியல் நெருக்கடி: தீர்வு காண இமாச்சல பிரதேசம் விரைகிறார் டி.கே. சிவகுமார்

Published On 2024-02-28 07:17 GMT   |   Update On 2024-02-28 07:17 GMT
  • ஆறு எம்.எல்.ஏ.-க்களை பா.ஜனதா அரியானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
  • மூத்த அரசியல் தலைவரின் மகனும், மந்திரியுமான விக்ரமாதித்யா சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரேயொரு தொகுதிக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 40 எம்.எல்.ஏ.-க்களை வைத்திருந்ததால் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் பா.ஜனதாவுக்கு மாறி வாக்களித்ததால் 25 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே வைத்துக் கொண்டு களத்தில் இறங்கிய பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இதனால் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதேவேளையில் பா.ஜனதா இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது எனக் கூறி வருகிறது. மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருக்கிறது. சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான தீர்மானம் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்த இருக்கிறது. இது தொடர்பாக இன்று ஆளுநரை சந்தித்தனர்.

இந்த நிலையில் சட்டமன்றம் கூடிய நிலையில் 15 பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இதற்கிடையே ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா அரியானா மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குற்றம்சாட்டினார்.

இவ்வாறு சென்று கொண்டிருக்கும் நிலையில் மந்திரி சபையில் இருந்து விக்ரமாதித்யா சிங் விலகியுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வீரபத்ர சிங்கின் மகன் ஆவார்.

இதனால் இமாச்சல பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஆட்சியை காப்பாற்ற பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மேலும் எம்.எல்.ஏ.-க்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

சுக்விந்தர் சிங் சுகு

இதனால் கர்நாடக மாநில துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான டி.கே. சிவகுமாரை இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளார். அவர் இமாச்சல பிரதேசம் சென்று கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அரியானா மாநில முன்னாள் முதல்வர் புபேந்தர் சிங் ஹூடாவும் இமாச்சல பிரதேசம் செல்ல இருக்கிறார்.

2001-ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேஷ்முக் தலைமையிலான காங்கிரஸ் கட்சி சிக்கலை எதிர்கொண்டபோது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களை பெங்களூரு வரவழைத்து, அவர்களை உபசரித்து நெருக்கடியை தீர்த்தார். அதன்மூலம் சிக்கலை தீர்த்து வைக்கக் கூடியது தலைவர் என டி.கே. சிவக்குமார் பெயர் பெற்றார்.

தற்போது இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் சிக்கலை தீர்த்து வைப்பார் என காங்கிரஸ் மேலிடம் நம்புகிறது.

Tags:    

Similar News