இந்தியா

குஜராத் தேர்தல் முடிவுகள் இறுதி நிலவரம்: 156 தொகுதிகளை கைப்பற்றி பாஜக வரலாற்று வெற்றி

Published On 2022-12-08 17:27 GMT   |   Update On 2022-12-08 17:27 GMT
  • 1985-ல் 149 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய சாதனையை பாஜக முறியடித்தது.
  • கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.

அகமதாபாத்:

182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஆளும் பாஜக வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. வெற்றி பெற 92 இடங்கள் தேவை என்ற நிலையில், 150க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆளும் பாஜக 156 தொகுதிகளை கைப்பற்றி, 7வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு முன்னர் 2002-ல் 127 இடங்களை கைப்பற்றி பாஜக சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை இந்த தேர்தலில் முறியடித்தது மட்டுமல்லாமல், 1985-ல் மறைந்த மாதவ்சிங் சோலங்கியின் தலைமையில் 149 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய சாதனையையும் முறியடித்தது.

காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் முறையாக குஜராத்தில் கால் பதித்துள்ள ஆம் ஆத்மி கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் 49 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக, இந்த முறை 53 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான வாக்குகள் 42 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக குறைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 13 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

மொத்த தொகுதிகள்- 182

பாஜக- 156

காங்கிரஸ்- 17

ஆம் ஆத்மி கட்சி - 5

சுயேட்சைகள் - 3

மற்றவை - 1

Tags:    

Similar News