'கணவர்கள் முட்டாள் சோம்பேறிகள்'.. விளம்பர வீடியோவால் சர்ச்சை - மன்னிப்பு கேட்ட பிளிப்கார்ட்
- கணவர்கள் சோம்பேறிகள், திறனற்றவர்கள், முட்டாள்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது
- அந்த வீடியோ பிக் பில்லியன் டேஸ் ப்ரோமோஷனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சிறப்பு தள்ளுபடி நாட்களை அறிவித்து நடத்துவது வழக்கம். அவ்வாறு பிக் பில்லியன் டேஸ் சேல் என்ற தள்ளுபடி ஆஃபர் வாரத்தை அறிவித்துள்ளது. இந்த பிக் பில்லியன் டேஸ் ஆஃபர் நேற்று தொடங்கிய நிலையில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வரை இருக்கும்.
இந்நிலையில் இந்த பிக் பில்லியன் டேஸ் வியாபாரத்துக்கு பிளிப்கார்ட் வெளியிட்டுள்ள ப்ரோமோஷனல் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த அனிமேஷன் வீடியோவில் கணவர்கள் சோம்பேறிகள், துரதிஷ்டம்பிடித்தவர்கள், முட்டாள்கள் என்று சித்தரித்துள்ளதே சர்ச்சைக்குக் கரணம்.
கணவர்களுக்குத் தெரியாமல் மனைவிகள் எப்படி ரகசியமாக ஹேண்ட் பேக் - களை வாங்குகின்றனர் என்பது தொடர்பாக அந்த வீடியோ பிக் பில்லியன் டேஸ் ப்ரோமோஷனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டங்கள் எடுத்தது. ஆண்கள் நலச் சங்கமும் கண்டனங்களை தெரிவித்தது. இதனையடுத்து அந்த வீடியோவை நீக்கி பிளிப்கார்ட் நிறுவனம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டுள்ளது.