இந்தியா
null

வாலிபரை நாய் கடித்ததால் உரிமையாளர் மீது பயங்கர தாக்குதல்

Published On 2024-05-17 08:50 GMT   |   Update On 2024-05-17 09:37 GMT
  • நாயை அங்குள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
  • ஒரு சம்பவத்தில் நாயின் உரிமையாளர் கடுமையாக தாக்கப்பட்டது தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐதராபாத் மதுரா நகர் அருகே உள்ள ரகமத் நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் வீட்டில் வெளிநாட்டு வகை நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

அந்த நாயை தெருவில் நடை பயிற்சிக்காக அழைத்து சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தனுஞ்சய் என்பவரை நாய் திடீரென கடித்தது.

இதனால் ஆத்திரமடைந்த தனுஞ்சய் நாயின் உரிமையாளர் ஸ்ரீநாத்திடம் தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த தனுஞ்சய் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சேர்ந்து ஸ்ரீநாத்தை உருட்டு கட்டைகளால் அடித்து தாக்கினர்.

மாறி மாறி தாக்கியதை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஸ்ரீநாத்தின் தாய் மற்றும் சகோதரி இதனை தடுக்க முயன்றனர். அவர்களையும் உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான நாயை உருட்டு கட்டையால் தலையில் அடித்தனர். இதில் நாய் சுருண்டு விழுந்தது. இது பற்றிய தகவலறிந்த மதுரா நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

ஸ்ரீநாத்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நாயை அங்குள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் இது தொடர்பாக தாக்குதல் மற்றும் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபரை நாய் கடிப்பது மற்றும் நாயின் உரிமையாளரை தாக்கும் பதற வைக்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியது.

வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை சாலை, பூங்காக்களில் நடை பயிற்சிக்காக அழைத்துச் செல்லும்போது அந்த நாய்கள் பொது மக்களை கடித்து காயப்படுத்துகின்றன.

இதுபோன்ற ஒரு சம்பவத்தில் நாயின் உரிமையாளர் கடுமையாக தாக்கப்பட்டது தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags:    

Similar News