பப்ஜி காதலனை தேடி வந்த பாகிஸ்தான் பெண்ணால் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த பயங்கர மிரட்டல்
- சீமாஹைதருக்கு உதவியதாக அவரது காதலன் சச்சினும் கைது செய்யப்பட்டார்.
- பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த சிலர் சீமாஹைதரை பாகிஸ்தானிடம் ஒப்படைக்காவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
மும்பை:
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் சீமாஹைதர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு திருணமத்திற்கு பிறகு கராச்சியில் குடியேறினார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இந்நிலையில் சீமாஹைதர் தனது கணவரை விட்டு விட்டு, காதலனை பார்ப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்தார். பின்னர் சீமாஹைதர் சச்சினுடன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் பாதுகாப்பு படை போலீசார் சீமாஹைதரை கடந்த 4-ந் தேதி கைது செய்தனர்.
மேலும் சீமாஹைதருக்கு உதவியதாக அவரது காதலன் சச்சினும் கைது செய்யப்பட்டார். பின்னர் 7-ந் தேதி இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் சீமாஹைதர் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த சிலர் சீமாஹைதரை பாகிஸ்தானிடம் ஒப்படைக்காவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் பேசியுள்ளார். உருது மொழியில் பேசிய அவர், சீமாஹைதரை மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பாவிட்டால் 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலுக்கு மும்பை போலீசார் தயாராக இருக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மும்பை போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.