இந்தியா
null

கடவுளை நம்பியிருந்தால்.. பணிச்சுமையால் உயிரிழந்த பெண் குறித்து நிர்மலா சீதாராமன் சர்ச்சை பேச்சு

Published On 2024-09-23 11:05 GMT   |   Update On 2024-09-23 11:06 GMT
  • ஆன்மீக சக்தி வளர்ந்தால்தான் அழுத்தத்தைத் தாங்கும் அளவுக்கு இன்னர் ஸ்ட்ரென்த் வளரும்
  • ஊழியர்கள் எவ்வளவு பணிச்சுமையையும் கடவுளைக் கும்பிட்டுக்கொண்டே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாட்டின் நிதி அமைச்சரே பேசியுள்ளார்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் எர்ன்ஸ்ட் & யங் (EY) நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது இளம்பெண் அன்னா செபாஸ்டியன் பணிச்சுமை காரணமாக அதிக அழுத்தம் ஏற்பட்டு கடந்த ஜூலை 20-ம் தேதி விடுதியில் உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு, கார்ப்பரேட் ஊழியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதிகரித்து வரும் கார்ப்பரேட் கலாச்சாரத்தால் வரைமுறையற்ற வேலை நேரம் மற்றும் பணிச்சுமையால் அதிகளவில் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அன்னா செபாஸ்டின் மரணம் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய நிர்மலா சீதாராமன், நமது பிள்ளைகள் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கு வீட்டை வெட்டு வெளியேறி படித்து வருகின்றனர். சிஏ படித்த பெண் ஒருவர் நிறுவனம் ஒன்றில் பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் இறந்ததாக சமீபத்தில் செய்தி ஒன்று வந்தது. நீ எவ்வளவு படித்தாலும் என்ன வேலை செய்தாலும் மனதில் ஏற்படும் எவ்வளளவு பெரிய அழுத்தத்தையும் எடுத்துக்கொள்ளக்கூடிய உள் சக்தி வர வேண்டும் .அது தெய்வீகம் மூலமாகத்தான் வரும்.

இறைவனை நம்பு, இறைவனை நாடு என பெற்றோர் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். ஆன்மீக சக்தி வளர்ந்தால்தான் அழுத்தத்தைத் தாங்கும் அளவுக்கு இன்னர் ஸ்ட்ரென்த் வளரும், கல்வி நிறுவனங்கள் ஆன்மீகத்தை சொல்லித்தர வேண்டும் என்று பேசியுள்ளார். இந்நிலையில் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.

உயிர்களைப் பறிக்கும் விஷத்தன்மையுடைய பணியிட சூழல்களை ஒழுங்குபடுத்துவதை விட்டுவிட்டு ஊழியர்கள் எவ்வளவு பணிச்சுமையையும் கடவுளைக் கும்பிட்டுக்கொண்டே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாட்டின் நிதி அமைச்சரே பேசியுள்ளது நியாயமற்றது என்று காங்கிரஸ் சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, கேரள கம்யூனிஸ்ட் எம்.பி சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News