திருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி. டிக்கெட்
- ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை.
- ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் அறிமுகம்.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பழைய கோவில்களை புதுப்பிக்கவும், இந்து அறநிலையத்துறை சார்பில் உள்ள மற்றும் கிராமப்புற கோவில்களில் தூபதீப நெய் வேத்தியம் சமர்ப்பிக்கவும், மதமாற்றம் நடைபெறக் கூடிய இடங்களில் புதிதாக கோவில்கள் கட்டுவதற்காக ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
இதற்கு நிதிதிரட்டும் வகையில் ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. பக்தர்கள் யாருடைய சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் நேரடியாக வி.ஐ.பி. டிக்கெட்டுகளைப் பெற்று சாமி தரிசனம் செய்வதற்காக ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் ஒரு பக்தருக்கு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கப்படுகிறது.
இதற்காக ஆன்லைனில் நன்கொடை பெற்று வி.ஐ.பி. டிக்கெட் வழங்கப்படுகிறது.
நேரடியாக திருப்பதிக்கு வரும் பக்கர்களுக்கு திருமலையில் ஆப்லைனில் கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்தில் இந்த டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. அங்கு போதிய வசதி இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் கோகுலம் கெஸ்ட் ஹவுஸ் பின்புறத்தில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளுக்கான புதிய கவுன்டரை கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி சிறப்பு பூஜைகள் செய்து திறந்து வைத்தார்.
பக்தர்களிடம் விவரம் பெற்று கொண்டு முதல் டிக்கெட் வழங்கினார். இதுகுறித்து வெங்கையா சவுத்திரி கூறுகையில்:-
கடந்த காலங்க ளில் சிரமத்தை உணர்ந்து சிறப்பு கவுண்டர் அமைக்கப் பட்டுள்ளது. இனி பக்தர்கள் சிரமமின்றி ஒரு நிமிடத்தில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெறலாம் என்றார்.
திருப்பதி கோவில் நேற்று 66,441 பேர் சாமி தரிசனம் செய்தனர். 20,639 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 4.12 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
நேரடி இலவச தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.