உள்துறை மந்திரி அமித்ஷா மீது குற்றச்சாட்டு: கனடா தூதருக்கு சம்மன் அனுப்பிய இந்தியா
- நிஜ்ஜார் கொலை விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது.
- இரு நாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.
புதுடெல்லி:
கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.
இதற்கிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை துணை மந்திரி டேவிட் மாரிசன் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் விவகாரத்தில் அமித்ஷா மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் கனடா தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், உள்துறை மந்திரி அமித்ஷா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதனால் கனடா தூதருக்கு இந்திய வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது என தெரிவித்தார்.