ஆந்திர கோவிலில் பித்தளை அண்டா திருடிய வாலிபருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிபதி
- நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இதனை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
- நீதிபதி அளித்த நூதன தண்டனை ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் கனிகிரி பகுதியை சேர்ந்தவர் அங்கய்யா (வயது 28) கடந்த 13-ந்தேதி அங்குள்ள கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கோவிலுக்குள் நுழைந்த அங்கய்யா அங்கிருந்து பித்தளை அண்டா உள்ளிட்ட 3 பாத்திரங்களை நைசாக திருடி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருட்டு நடந்த சில மணி நேரத்தில் அங்கய்யாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கோவில் அண்டா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரை கனிகிரி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அங்கய்யா தான் தற்போது தான் முதன் முதலில் திருட்டில் ஈடுபட்டேன். என்னை மன்னித்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரத் சந்திரா இந்தியாவில் புதிதாக அமல்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் அங்கய்யாவுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அதில் நவம்பர் 2-ந் தேதி (இன்று) முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை கனிகிரி முக்கிய சந்திப்புகள் மற்றும் தெருக்களை காலை 6 மணி முதல் 9 மணி வரை அங்கய்யா சுத்தம் செய்ய வேண்டும். நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இதனை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
கோர்ட்டு அளித்த இந்த சமூக சேவை நூதன தண்டனை ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.