ராகுல்காந்திக்கு மறைமுக ஆதரவு: வயநாடு தொகுதியில் பிரசாரத்தை கண்டு கொள்ளாத கம்யூனிஸ்டு கட்சிகள்
- வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரியங்காவுடன் ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் ராகுல்காந்தி.
- ராகுலுக்கு எதிராக கம்யூனிஸ்டு வேட்பாளரை நிறுத்தியதற்கு காங்கிரசும் கண்டனம் தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டன.
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள தொகுதிகளில் ஒன்று கேரள மாநிலம் வயநாடு.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த தேர்தலில் இங்கு வெற்றி பெற்றார். அவர் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இடது சாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா களம் இறக்கப்பட்டு உள்ளார்.
பாரதிய ஜனதா சார்பில் கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி பெரும் எதிர்பார்ப்புக்கு உரிய தொகுதியாக விளங்கி வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரியங்காவுடன் ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி னார் ராகுல்காந்தி.
நாடு முழுவதும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரசுடன் கை கோர்த்து உள்ள கம்யூனிஸ்டுகள், கேரளாவில் மட்டும் எதிர்த்து போட்டியிடுகின்றன. இதனை பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதற்கிடையில் ராகுல் காந்தி வயநாட்டில் களம் இறங்கியதற்கு இடது சாரி கட்சியும், ராகுலுக்கு எதிராக கம்யூனிஸ்டு வேட்பாளரை நிறுத்தியதற்கு காங்கிரசும் கண்டனம் தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில் ராகுலுக்கு எதிராக வயநாடு பிரசாரத்தில் இடதுசாரி கூட்டணியினர் பெரும் அளவில் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா போட்டியிடும் நிலையிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வயநாட்டில் பிரசாரத்தை பெரிதுபடுத்தவில்லை. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பொலிட் பீரோ உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், தபன் சென், சுபாஷினி அலி ஆகியோர் கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், அவர்கள் வயநாடு தொகுதிக்கு செல்லும் வகையில் பிரசார நிகழ்வு இல்லை. மத்தியக் குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணா மட்டுமே, வயநாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மண்டல பொதுச் செயலாளர் டி.ராஜா, மத்திய செயலக உறுப்பினரும் ஏ.ஐ.டி.யூ.சி அகில இந்திய பொதுச் செயலாளருமான அமர்ஜித் கவுர் ஆகியோரும் வயநாட்டில் பிரசாரம் செய்ய உள்ளனர்.
ராகுலுக்கு எதிராக இடது சாரி கூட்டணியினர் பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது வயநாடு தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.