இந்தியா

இந்திராணி முகர்ஜியின் கதை: நெட்பிளிக்ஸ் தொடருக்கு எதிரான தடை நீக்கம்

Published On 2024-03-01 09:57 GMT   |   Update On 2024-03-01 09:57 GMT
  • ஷீனா அமெரிக்காவில் தங்கி படித்து வருவதாக இந்திராணி முகர்ஜி கூறி வந்தார்
  • ஷியாம்வர் வேறொரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட போது உண்மை வெளிவந்தது

ஐஎன்எக்ஸ் மீடியா (INX Media) எனும் தொழில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர் இந்திராணி முகர்ஜி (Indrani Mukerjea).

இந்திராணி முகர்ஜியின் முதல் திருமணத்தின் மூலம் அவருக்கு பிறந்தவர் ஷீனா போரா (Sheena Bora).

2012 ஆண்டிலிருந்து இந்திராணி முகர்ஜியின் மகள், ஷீனா போரா (24) பொதுவெளியில் காணப்படவில்லை. ஷீனா அமெரிக்காவில் தங்கி படித்து வருவதாக இந்திராணி முகர்ஜி தெரிவித்து வந்தார்.

2015ல் இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுனர் ஷியாம்வர் ரய் (Shyamvar Rai) ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நடைபெற்ற விசாரணையில், இந்திராணி முகர்ஜியும், அவரது முன்னாள் கணவரும் சேர்ந்து அவரது மகள் ஷீனா போராவை காரில் கொலை செய்ததாக தெரிவித்து அப்ரூவர் ஆனார்.

இதை தொடர்ந்து இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு பிறகு நீதிமன்ற தீர்ப்பின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்திராணியின் அப்போதைய கணவரான பீட்டர் முகர்ஜிக்கு அவரது முந்தைய திருமணத்தில் பிறந்த அவரது மகன் ராகுலுடன் ஷீனாவிற்கு இருந்த தொடர்பு இந்திராணிக்கு பிடிக்காததால் இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் இந்திராணி இந்த கொலையை செய்தார்.

சுமார் 4 வருட சிறைவாசத்திற்கு பிறகு 2020ல் மும்பை உயர் நீதிமன்றம் இந்திராணி முகர்ஜிக்கு ஜாமின் வழங்கியது.

இந்நிலையில், "இந்திராணி முகர்ஜியின் கதை: புதைக்கப்பட்ட உண்மை" எனும் தலைப்பில் டாகுமென்டரி தொடர் (docu-series) நெட்ப்ளிக்ஸ் (Netflix) தளத்தில் 2024 பிப்ரவரி 23 அன்று ஒளிபரப்பாக இருந்தது.

நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் இவ்வழக்கை விசாரித்து வந்த மத்திய புலனாய்வு துறை (CBI) இந்த தொடர் ஒளிபரப்பானால் வழக்கு விசாரணையின் போது ஒருதலைபட்சமாக கருத்து உருவாக சாத்தியக்கூறு உள்ளதாக கூறி வழக்கு விசாரணை முடியும் வரை, தொடரை ஒளிபரப்ப தடை கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.


நேற்று, மும்பை உயர் நீதிமன்றம், சிபிஐ-யின் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இதை தொடர்ந்து விரைவில் இந்த தொடர் ஒளிபரப்பப்படும் என தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News