இந்தியா

பீகார் மாநிலத்தில் புதுமையான பள்ளிக்கூடம்: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க 3 மாத பயிற்சி

Published On 2023-04-27 07:02 GMT   |   Update On 2023-04-27 12:24 GMT
  • கூடுதல் அம்சமாக 15 நாட்கள் செயல்முறை பயிற்சியும் தருகிறார்கள்.
  • ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் நுட்பத்தை பீகாரின் சப்ரா பகுதியை சேர்ந்த சுதிர் மிஸ்ராவிடம் கற்றுக் கொண்டதாக கூறினார்.

லக்னோ:

சமீப காலங்களாக ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் அனுபவமில்லாத கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் தோல்வி அடைகிறார்கள்.

இவர்களை போன்று அனுபவம் இல்லாதவர்களுக்கு பீகார் மாநிலத்தில் புதுமையான பள்ளிக் கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக் கூடத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க 3 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கூடுதல் அம்சமாக 15 நாட்கள் செயல்முறை பயிற்சியும் தருகிறார்கள்.

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 4-ந் தேதி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த ரூ.39.58 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் கொள்ளையர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தான் இந்த புதுமையான பள்ளிக் கூடம் பற்றிய தகவல் கிடைத்தது.

கைதான ஏ.டி.எம். கொள்ளையன் நீரஜ் என்பவரிடம் விசாரித்தபோது, அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் நுட்பத்தை பீகாரின் சப்ரா பகுதியை சேர்ந்த சுதிர் மிஸ்ராவிடம் கற்றுக் கொண்டதாக கூறினார்.

வெளி மாநிலங்களை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பது குறித்து 3 மாத பயிற்சியை சுதிர் மிஸ்ரா அளித்துள்ளார். இதனால் அவர் ஏ.டி.எம். பாபா என்றும் அழைக்கப்பட்டுள்ளார்.

ஏ.டி.எம். அறையின் கண்ணாடிகளில் பனி படர்ந்தது போன்ற திரவத்தை அடிப்பது, அதன் பிறகு 15 நிமிடங்களுக்குள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை எடுப்பது குறித்து அவர் நேரடி பயிற்சி அளித்து உள்ளார். பயிற்சி முடித்தவர்களுக்கு 15 நாட்கள் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியை 15 நிமிடங்கள் மற்றும் அதற்கு முன்பாக முடிப்பவர்கள் மட்டுமே ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை கொள்ளையடிப்பதற்கு களம் இறக்கப்படுகிறார்கள்.

ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் கொள்ளையர்களுக்கு பயிற்சி அளித்த ஏ.டி.எம். பாபா சுதிர் மிஸ்ராவை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News