இந்தியா

மதியம் 3 மணிக்கு இன்ட்ரவல்.. காத்து வாங்கிய எஸ்பிஐ வங்கி.. போட்டோ எடுத்தவருக்கு நேர்ந்த கதி

Published On 2024-05-31 11:06 GMT   |   Update On 2024-05-31 11:06 GMT
  • எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்
  • பிரச்சனையை சரி செய்யாமல் பிரச்னையை சுட்டிக்காட்டிய நபருக்கு எச்சரிக்கை விடுப்பது ஏற்புடையது அல்ல என்று எஸ்பிஐ வங்கிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

பொதுவாகாவே இந்தியாவில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்களை அதிக நேரம் காக்க வைப்பதாகவும் வங்கி வேலைகள் ஆமை வேகத்தில் நகர்வதாகவும் சாமானிய மக்களிடம் பொதுக்கருத்து நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட ஹிந்தி அல்லாத மொழி மாநிலங்களின் வங்கி காசோலை மற்றும் பிற தகவல்கள் அம்மாநில மொழிகளில் அல்லாமல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதாகவும் அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுந்து சர்ச்சையாவதுண்டு.

அந்த வகையில் இந்தியாவின் பிரதான பொதுத்துறை வங்கியாக விளங்கும் பாரத ஸ்டேட் வங்கி ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது. எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துகலையாகக் கிடந்த வங்கி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து, மதியம் 3 மணிக்கு ஊழியர்கள் அனைவரும் இடைவேளைக்கு சென்றுள்ளனர் என்றும் உலகமே மாறினாலும் உங்கள் சேவைகளின் தரம் இந்த அளவில் தான் உள்ளது என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ, வங்கிக்குள் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த புகைப்படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அந்த நபருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரச்சனையை சரி செய்யாமல் பிரச்னையை சுட்டிக்காட்டிய நபருக்கு எச்சரிக்கை விடுப்பது ஏற்புடையது அல்ல என்று எஸ்பிஐ வங்கிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அந்த நபரின் பதிவுக்கு எஸ்பிஐ வங்கி அளித்த ரிப்ளையை டேக் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். புகைப்படத்தில் உள்ள எஸ்பிஐ கிளை எங்கு உள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.

இதற்கிடையில் சமீபத்தில் தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட தாமதம் செய்ததால் எஸ்பிஐ வங்கி சர்ச்சையில் சிக்கியது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து நன்கொடையாளர்கள் பெயர்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News