இந்தியா (National)

எல்.வி.எம். மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது: இஸ்ரோ தகவல்

Published On 2023-03-26 05:38 GMT   |   Update On 2023-03-26 05:38 GMT
  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி 36 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
  • பூமிக்கு மேலே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் 87.4 டிகிரியில் புவி வட்ட பாதையில் இந்த செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.

ஸ்ரீஹரிகோட்டா:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நம் நாட்டின் செயற்கை கோள்கள் மட்டுமல்லாமல், வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கை கோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது.

இஸ்ரோ நிறுவனம் அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 'எல்.வி.எம்.-மார்க்3' என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது. திட மற்றும் திரவ எரிபொருளில் இயங்கும் மார்க் 3 ராக்கெட் 640 டன் எடை மற்றும் 43.5 மீட்டர் உயரம் கொண்டது. இந்தியாவிலேயே அதிக எடை கொண்ட ராக்கெட் இதுவாகும்.

இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 இணைய சேவை செயற்கை கோள்களை விண்ணில் ஏவ அந்த நிறுவனம், இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் சுமார் ரூ. 1000 கோடியில் ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி 36 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. அவை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.

2-வது கட்டமாக மீதமுள்ள 36 செயற்கை கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டன. தீப்பிழப்புடன் கரும்புகையை கக்கியபடி 36 இணைய தள சேவை செயற்கை கோள்களை சுமந்துகொண்டு எல்.வி.எம்.-மார்க்3 செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. இந்த செயற்கைகோள்கள் மொத்தம் 5,805 கிலோ எடை கொண்டவை. ஒவ்வொரு செயற்கைகோளும் 150 கிலோ எடை கொண்டது.

பூமிக்கு மேலே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் 87.4 டிகிரியில் புவி வட்ட பாதையில் இந்த செயற்கை கோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன. இந்த செயற்கைகோள்கள் தடையில்லா பிராட்பேண்ட் இணைய தள சேவையை வழங்கும்.

Tags:    

Similar News