அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் 1 லட்சம் திருப்பதி லட்டுகள் விநியோகம் - தலைமை பூசாரி வருத்தம்
- அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி செலவில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் முன்னெடுப்பினால் ராமர் கோவில் கட்டப்பட்டது
- கும்பாபிஷேகத்தில் நாட்டில் உள்ள திரைத்துறை, அரசியல் மற்றும் வியாபார பெரும் புள்ளிகள் திரளாக கலந்துகொண்டனர்.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் விநியோகிக்கப்படும் உலகப் புகழ் பெற்ற பிரசாதமான லட்டு மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றி கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த சர்ச்சை அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆந்திர பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த ஜெகன் மோகன் ஆட்சியில் இந்த முறைகேடு நடந்ததாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் பிரான பிரதிஷ்டை கும்பாபிஷேகத்தின்போது கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு 300 கிலோ அளவிலான 1 லட்சம் திருப்பதி லட்டுக்கள் விநியோகிக்கப்பட்டதாக கோவிலின் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி செலவில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் முன்னெடுப்பினால் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில் நாட்டில் உள்ள திரைத்துறை, அரசியல் மற்றும் வியாபார பெரும் புள்ளிகள் திரளாக கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இருந்து வரவழைக்கப்பட்ட 300 கிலோ லட்டுகளை விருந்தினர்களுக்கு விநியோகித்தோம் என்று அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆசார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றம். இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.