மசூதியை இடிக்க வந்த அதிகாரிகள்.. 'காலா' பட பாணியில் தாராவி மக்கள் வழிமறித்து போராட்டம் - வீடியோ
- மெஹபூப் -இ- சுப்ஹானி மசூதியின் பகுதி சாலையில் 90 அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுக் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இடிக்க வந்தனர்.
- நூற்றுக்கணக்கான மக்கள் தாராவி காவல் நிலையத்தின் முன் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய குடிசை குடியிருப்பு பகுதியாக தாராவி உள்ளது. இங்கு தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் வேலை நிறுத்தம் செய்தால் மும்பை நகரமே முடங்கும் அளவுக்கு நகரம் முழுவதிலும் பரவி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறனர்.
சமீபத்தில் தாராவியை மறுசீரமைப்பு செய்யும் டெண்டரை இந்தியாவின் பெரும் பணக்காரரான அதானி கைப்பற்றியுள்ளதும் அரசியல் ரீதியாக புகைச்சலை ஏற்படுத்தி உள்ள நிலையில் தாராவியில் உள்ள மசூதி கட்டடத்தின் பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது என கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க வந்துள்ளனர்.
தாராவியில் உள்ள மெஹபூப் -இ- சுப்ஹானி மசூதியின் பகுதி சாலையில் 90 அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுக் கட்டப்பட்டுள்ளதாக அதை இடிக்க G-North பகுதியை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை 9.00 மணி அளவில் வருவதை அறிந்த தாராவி மக்கள் அவர்கள் மசூதிக்கு வரும் வழிகளை அடைத்து அதிகாரிகள் மசூதியை நெருங்காதபடி தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் தாராவி காவல் நிலையத்தின் முன் திரண்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களைச் சமாதானப்படுத்த காவல்துறை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.