NCERT-இல் அரசமைப்பு முகவுரை நீக்கப்படவில்லை என்பது பொய்.. ஆதாரத்துடன் காங்கிரஸ் நோட்டீஸ்
- 3 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான என்சிஆர்டி பாடப்புத்தகங்களில் அரசமைப்பு முகவுவுரை நீக்கப்பட்டுள்ளதாக கார்கே குற்றம் சாட்டினார்.
- சம்பந்தப்பட்ட புத்தகங்களை இணைந்து அவற்றில் அரசியலமைப்பு முகவுரை குறிப்புக்கள் நீக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்
என்சிஆர்டி புத்தகங்களில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கடந்த ஆக்ஸ்ட் 7 ஆம் தேதி மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எழுப்பிய அவையின் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 3 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான என்சிஆர்டி பாடப்புத்தகங்களில் அரசமைப்பு முகவுவுரை நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசியமத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அந்த குற்றச்சாட்டை மறுத்து 6 வகுப்பு பாடத்தில் முகவுரை குறித்த குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது தர்மேந்திர பிரதான் கூற்று தவறானது என்றும் மாநிலங்களவையில் தவறான செய்திகளை தந்திருக்கிறார் என்றும் அவர் மீது காங்கிரஸ் நோட்டிஸ் விடுத்துள்ளது.
நேற்று மாநிலங்களவைத் சபாநாயகரும் துணைக் குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கரிடம் இது தொடர்பான கடிதத்தை, காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வழங்கினார். அதில், தர்மேந்திர பிரதானின் கூற்று பொய்யானது என்றும் அவையைத் தவறாக வழிநடத்துகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்குச் சான்றளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட 3 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை இணைந்து அவற்றில் அரசியலமைப்பு முகவுரை குறிப்புக்கள் நீக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மாநிலங்களவையில் தவறான தகவல்களை வழங்கிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரிதான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஜெகதீப் தன்கரை ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தினார்.