கேரள மென்பொருள் அதிகாரியின் சாதனை: ஸ்கை டைவிங் விளையாட்டில் புதிய உச்சம்
- அதிக பயிற்சியும், திறனும் தேவைப்படும் ஆபத்தான விளையாட்டாக கருதப்படுகிறது
- 10 மாதங்களுக்கு முன்புதான் அக்டோபர் 2022ல் பயிற்சியை தொடங்கினார்
கொச்சியில் உள்ள என்டைமென்ஷன்ஸ் ஸொல்யூஷன்ஸ் (Ndimensionz Solutions) எனும் தனியார் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜித்தின் விஜயன் (41).
அதிக பயிற்சியும், திறனும் தேவைப்படும் ஆபத்தான விளையாட்டான ஸ்கை டைவிங்கில் இவர் உலக சாதனை படைத்துள்ளார்.
ஜூலை 1 ஆம் தேதி அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள வைட்வில் பகுதியில் தனது மிக சமீபத்திய ஜம்ப் மூலம் வெளிப்புற ஃப்ரீஃபால் எனப்படும் வானில் இருந்து குதிக்கும் விளையாட்டில் 2:47 நிமிடங்களில் செய்து காட்டி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
மிக உயரமான உயரத்தில் இருந்து குதிக்கும் விளையாட்டில் 42,431 அடிகளிலிருந்து குதித்ததற்காகவும், பாதுகாப்பு கவசமின்றி குதிக்கும் விளையாட்டில் 36,929 அடிகளிலிருந்து குதித்ததற்காகவும் இவர் 2 ஆசிய சாதனைகளையும் படைத்துள்ளார்.
மவுண்ட் எவரெஸ்டின் உயரமான 29,030 அடிகளை விட 42,431 அடி உயரத்தில் இவர் நம் இந்திய தேசிய கொடியை பறக்க விட்டு புது கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
உலக வான் விளையாட்டுக்களுக்கான கூட்டமைப்பை (World Airsports Federation) சேர்ந்த அதிகாரி ஒருவரால் இந்த பதிவுகள் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டன.
இதன்படி ஜித்தின் ஸ்கை டிவிங்கின் செய்த மொத்த கால அளவு 7 நிமிடங்களுக்கு மேல் உள்ளது.
ஸ்கை டைவிங் விளையாட்டு பயிற்சியை ஜித்தின் ஒரு வருடத்திற்கும் குறைவாக 10 மாதங்களுக்கு முன்புதான் அக்டோபர் 2022ல் தொடங்கினார் என்பது இவரது சாதனைகளில் மற்றொரு கூடுதல் சிறப்பு. இந்த 10 மாதங்களுக்குள், அவர் தனது 148 முறை குதித்திருக்கிறார்.
இந்தியாவில் ஸ்கை டைவிங் செய்தவர்களை விட எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தவர்களே அதிகம் என கூறும் விளையாட்டு நிபுணர்கள், இதிலிருந்தே இந்தியர்கள் இவ்விளையாட்டை எவ்வளவு ஆபத்தானதாக கருதுகிறார்கள் என்பதையும், இந்தியாவில் ஆர்வலர்கள் குறைவாக இருப்பதற்கான காரணத்தையும் கண்டறியலாம் என கூறுகின்றனர்.