"குடும்பம், சொத்துக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது தான் இந்தியா கூட்டணி"- ஜே.பி.நட்டா
- பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றார்.
- பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
பீகாரில் பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, "நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பியது பாஜகவிற்கு மகிழ்ச்சியான விஷயம். பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். ஜேடியு மற்றும் நிதிஷ்குமாரின் உண்மையான கூட்டணி என்.டி.ஏ. மட்டுமே. இந்தியா கூட்டணி புனிதமற்ற, அறிவியலற்ற கூட்டணி. அவர்களின் எண்ணம் பலிக்காது. குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தியா கூட்டணி. பீகாரில் என்.டி.ஏ ஆட்சி அமைக்கும் போதெல்லாம் மாநிலத்தின் வளர்ச்சி சாதனை படைக்கும். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றி 2025ல் மீண்டும் ஆட்சி அமைக்கும்" எனக் கூறினார்.