எடியூரப்பாவின் விமர்சனத்தை ஆசீர்வாதமாக எடுத்துக்கொள்வேன்: ஜெகதீஷ் ஷெட்டர்
- எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக பேச வைத்துள்ளனர்.
- எடியூரப்பா எனக்கு டிக்கெட் கிடைக்க கடைசி வரை போராடினார்.
உப்பள்ளி :
உப்பள்ளி டவுனில் நேற்று உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு லிங்காயத் தலைவரை ஒழிக்க இன்னொரு லிங்காயத் தலைவர் முதுகில் துப்பாக்கி வைத்து மிரட்டும் வேலையை பா.ஜனதா தற்போது செய்து வருகிறது. இவ்வாறு எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக பேச வைத்துள்ளனர். பா.ஜனதா சமுதாயத்தில் பிரிவினையை உருவாக்கும் வேலையை செய்து வருகிறது.
எனக்கு பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காமல் போனதற்கு பி.எல்.சந்தோஷ் தான் காரணம் என்றேன். இதுவரை அவர் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் வேறொருவர் மூலம் என்னை விமர்சிக்க வைக்கிறார். போர் என்றால் அவர் என்னுடன் நேருக்குநேர் மோத வரட்டும்.
எடியூரப்பா எனக்கு டிக்கெட் கிடைக்க கடைசி வரை போராடினார். எனக்கு சீட் கொடுக்காவிட்டால் கட்சிக்கு பாதிப்பு வரும் என கூறினார். அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் பற்றி நான் ஒரு போதும் தவறாக பேசவில்லை. இதை எடியூரப்பா புரிந்துகொள்ள வேண்டும். உப்பள்ளியில் 50-60 உறுப்பினர்களை கூட்டி எடியூரப்பா என்னை விமர்சித்துள்ளார். அதை நான் ஆசீர்வாதமாக தான் எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் நான் இந்த அளவுக்கு வளர்வதற்கு அவரும் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.