ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி படுதோல்வி அடைவார்- பிரசாந்த் கிஷோர்
- ஆந்திராவில் படித்த இளைஞர்கள் அரசு தரும் சலுகைக்காக காத்திருக்கவில்லை.
- ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.
திருப்பதி:
பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆந்திராவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தோல்வியை சந்திப்பார். அது சாதாரண தோல்வி அல்ல. மிகப்பெரிய தோல்வியை அவரால் தவிர்க்க முடியாது.
ஆந்திராவில் படித்த இளைஞர்கள் அரசு தரும் சலுகைக்காக காத்திருக்க வில்லை. வேலை வாய்ப்புக்காக வேலை தேடி அலைகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து வளங்களையும் ஒரு சில பிரச்சினைகளுக்காக செலவழித்து ஆந்திராவின் வளர்ச்சியை புறக்கணித்தது ஜெகன்மோகன் ரெட்டி பெரிய தவறு செய்துவிட்டார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் தற்போதைய நிலையை பார்க்கும் போது மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை. ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். அதுபோல் இல்லாமல் அரண்மனைகளில் தங்கி மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாக நினைக்கிறார்கள்.
இதுபோன்ற அணுகு முறையால் மக்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் சிறந்த பாத்திரமாக விளங்க வேண்டும். ஆனால் பல தலைவர்கள் தங்களை பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குபவர்களாகவே பார்க்கின்றனர்.
அப்படிப்பட்டவர்கள் தேர்தலில் பெரும் விலை கொடுக்க வேண்டியது வரும். தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெற முடியாது.
பொதுமக்கள் மாறி மாறி வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.