இந்தியா

கர்நாடகாவில் பா.ஜனதாவுடன் இணைந்து போட்டி: தேவகவுடா

Published On 2024-02-02 01:53 GMT   |   Update On 2024-02-02 01:53 GMT
  • கர்நாடகாவில் பாஜக- மதசார்பற்ற ஜனதா தளம் இடையிலான கூட்டணி உறுதியாகியுள்ளது.
  • தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி பெறவில்லை.

பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. இதனால் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கிவிட்டன. கூட்டணி கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

அதேவேளையில் பா.ஜனதா கூட்டணியிலும் ஏராளமான மாநில கட்சிகள் உள்ளன. பல மாநிலங்களில் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. கூட்டணியாகவும் களம் இறங்க இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் முக்கியமான கட்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடா வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுடன் இணைந்து போட்டியிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேவகவுடா கூறுகையில் "மதசார்பற்ற ஜனதா தளம், பா.ஜனதா ஆகியவை இணைந்து 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடும். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் நாங்கள் இணைந்து போட்டியிடுவோம். தேர்தலுக்குப் பிறகு முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்" என்றார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹெச்.டி. குமாரசாமி உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ளன. ஆனால் தொகுதி பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை.

சமீபத்தில் நடந்த கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்து. இதனால் தேவகவுடா கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்க முடியும் நினைக்கிறது.

குமாரசாமியின் ஆட்சி கவிழ காங்கிரஸ் முக்கிய காரணமாக இருந்தது. இதனால் பா.ஜனதா துணையுடன் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என குாமாரசாமி விரும்புவார்.

Tags:    

Similar News