காங்கிரசுக்கு வாக்களித்த மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ. - கர்நாடகாவில் பரபரப்பு
- கர்நாடகாவில் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் பா.ஜ.க. சார்பில் 2 பேர், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் தேர்வாவதில் எந்தச் சிக்கலும் இல்லை.
- மீதமுள்ள ஒரு இடத்திற்கு காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பெங்களூரு:
கர்நாடகாவில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. 4 இடங்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சார்பில் மொத்தம் 6 பேர் போட்டியிடுகின்றனர்.
பா.ஜ.க. சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் குபேந்திர ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், இன்று நடந்த வாக்குப்பதிவின்போது ம.ஜ.த. கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஸ்ரீனிவாச கவுடா தங்கள் கட்சி வேட்பாளருக்குப் பதிலாக காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மாற்றி ஓட்டளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனக்கு காங்கிரஸ் கட்சியைப் பிடிக்கும். அதனால் அதற்கு ஓட்டு போட்டேன் என தெரிவித்தார்.
அதேபோல், மற்றொரு ம.ஜ.த. எம்எல்ஏ ரேவண்ணா, தான் ஓட்டளித்த ஓட்டுச்சீட்டை காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ஜ.க. தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ ஒருவர் கட்சி மாறி காங்கிரசுக்கு ஓட்டளித்தது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.