இந்தியா (National)

அவரின்றி எதுவும் சாத்தியமில்லை, ரத்தன் டாடா மறைவுக்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் நெகிழ்ச்சி பதிவு

Published On 2024-10-11 14:41 GMT   |   Update On 2024-10-11 14:41 GMT
  • அவரது தனிப்பட்ட சாதனைகள், மதிப்புகள் சமூகத்தில் ஈடு இணையற்றவை.
  • டாடா பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அவரது உடல்நிலை மோசமான நிலையில் கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு ரத்தன் டாடா உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது. ரத்தன் டாடா மறைவை அடுத்து ஜாகுவார் லேண்ட் ரோவர் வலைதளத்தில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அட்ரியன் மார்டல் பதிவிட்டுள்ளார்.

அதில், "திரு. ரத்தன் டாடா மரணத்தால் ஒட்டுமொத்த ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) குடும்பமும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது தனிப்பட்ட சாதனைகள் மற்றும் மதிப்புகள் சமூகத்தில் ஈடு இணையற்றவை. மேலும் அவர் எங்கள் வணிகம் மற்றும் பிராண்டுகளில் விட்டுச் சென்ற முத்திரை மற்ற எந்த நபரையும் விட அதிகம் ஆகும்."

"2008 ஆம் ஆண்டு ரத்தன் டாடா ஜாகுவார் லேண்ட் ரோவரை வாங்கிய அவரின் ஒருமித்த கனவுக்கு நன்றி. அன்று துவங்கி நாம் இதுவரை அடைந்திருக்கும் எல்லாவற்றுக்கும் அவருடைய அசைக்க முடியாத ஆதரவு மற்றும் அர்ப்பணிப்பு இன்றி சாத்தியமில்லை. அதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்."

"திரு. டாடா எங்களை ஒரு அசாதாரண பயணத்தில் வழிநடத்தினார். அவர் நம் வரலாற்றில் நம்பமுடியாத புதிய அத்தியாயங்களைத் தூண்டினார். அவரது நம்பிக்கையான வழிகாட்டுதலின் கீழ், டாடா பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்."

"ஜாகுவார் லேண்ட் ரோவரில் உள்ள அனைவரின் சார்பாகவும், அவரது குறிப்பிடத்தக்க தலைமைத்துவத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News