பஜ்ரங் புனியா, சாக்ஷிக்கு எதிராக இளம் மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம்
- டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் 100-க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் எங்கள் வாழ்க்கையில் ஓராண்டை வீணாக்கி விட்டனர் என்றனர்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னணி வீரர்களான சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்துக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், மகளிர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு 2 முறை இடைநீக்கம் செய்யப்பட்டு, கூட்டமைப்பை தற்காலிகக் குழு நிர்வகித்து வருகிறது. கடந்த 2023 ஜனவரியிலிருந்து தேசிய சாம்பியன்கள் மற்றும் பிற போட்டிகள் எதுவும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் 100-க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் எங்கள் வாழ்க்கையில் ஓராண்டை வீணாக்கி விட்டனர் என்றனர்.
இம்மூன்று மல்யுத்த சாம்பியன்களும் தங்களின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகக் கூறி, அவர்களுக்கு எதிராக இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், 'சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பே.. எங்களை இந்த 3 வீரர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்தப் போராட்டத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகித்து வரும் தற்காலிகக் குழுவை கலைத்துவிட்டு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்திருக்கும் கூட்டமைப்பு நிர்வாக அமைப்பை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.