கர்நாடக தேர்தல் - மரத்தில் மறைத்து வைக்கப்பட்ட ரூ. 1 கோடி - அசால்டாக கண்டுபிடித்து பறிமுதல் செய்த அதிகாரிகள்!
- கர்நாடக காங்கிரஸ் தலைவரின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை இன்று சோதனை நடத்தியது.
- சோதனையின் போது வீட்டின் மரத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ. 1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் புத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் அசோக் குமார் ராயின் சகோதரர் சுப்ரமணிய ராயின் மைசூரு இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று நடத்தப்பட்ட சோதனையில் சுப்ரமணிய ராயின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி மரத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தேர்தல் நடத்தல் விதிகள் அமலில் உள்ளதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் இதுவரை ரூ. 110 கோடியை அதிகாரிகள் ரொக்கமாக பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை 2 ஆயிரத்து 346 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மே 13 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.