இந்தியா

சபரிமலையில் புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவருவின் மகன் நியமனம்

Published On 2024-07-03 05:27 GMT   |   Update On 2024-07-03 05:27 GMT
  • ஆவணி மாத தொடக்கத்தில் தான் தந்திரி பதவி மாற்றம் நடைபெறும்.
  • சிங்கமாத பூஜைகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஆலயம் சபரிமலை அய்யப்பன் கோவில். இந்த கோவிலின் முக்கிய பூஜைகளை கேரள மாநிலம் செங்கனூர் பகுதியை சேர்ந்த தாழமண் தந்திரி குடும்பத்தை சேர்ந்த வர்களே நடத்தி வரு கின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்த அனைத்து முக்கிய முடிவுகளையும் தாழமண் தந்திரி குடும்பத்தினர் தான் எடுப்பார்கள்.

தற்போது சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரியாக கண்டரரு ராஜீவரு மற்றும் கண்டரரு மகேஷ் மோகனரு ஆகி யோர் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தந்திரி பொறுப்பில் இருப்பார்கள். இந்த நிலையில் தந்திரி பொறுப்பில் இருந்து கண்டரரு ராஜீவரு விலக முடிவு செய்துள்ளார்.

அவருக்கு பதிலாக புதிய தந்திரியாக அவரது மகனான கண்டரரு பிரம்மதத்தன் நியமிக்கப்பட உள்ளார். ஆண்டு தோறும் மலையாள மாதமான சிங்க மாதம் (தமிழில் ஆவணி மாதம்) தொடக்கத்தில் தான் தந்திரி பதவி மாற்றம் நடைபெறும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ந்தேதி சிங்க மாதம் தொடங்குகிறது.

சிங்கமாத பூஜைகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது. அன்று சபரிமலை கோவில் தந்திரியாக கண்டரரு பிரம்மதத்தன் பொறுப்பேற்கிறார். அன்றைய தினம் மாலை அவரது முன்னிலையிலேயே சபரிமலை அய்யப்பன் கோவில் நடையை மேல்சாந்தி திறக்க உள்ளார்.

தந்திரி பொறுப்பில் இருந்து விலகினாலும், சபரிமலை விழாக்களில் கண்டரரு ராஜீவரு பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தந்திரியாக பொறுப்பேற்க உள்ள கண்டரரு பிரம்மதத்தன் தனது எட்டாவது வயதில் பூஜைகள் பற்றி படிக்க தொடங்கி இருக்கிறார். சட்டத்துறையில் பணியாற்றி வந்த அவர், சபரிமலை பூஜை பணிகளில் கவனம் செலுத்துவதற்காக அந்த பணியை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராஜினாமா செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News