கடைகளில் பெயர்ப் பலகை.. அமைதிக்காகவே இந்த உத்தரவு.. உச்சநீதிமன்றத்தில் அடம்பிடிக்கும் உ.பி அரசு
- அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
- உணவகங்களில் அசைவம் சமைக்கக்கூடாது என்று நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதற்கிடையில் கன்வர் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது.
பெயர் பலகையில் உரிமையாளர் பெயரை எழுதி வைத்திருக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், கடைகளின் பெயர் பலகையில் உரிமையாளர் பெயர் கட்டாயம் எழுத வேண்டும் என உத்தரவிட்ட அரசுகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைத்தது.
உ.பி., உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது உத்தரப் பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் தங்களது உத்தரவை நியாயப்படுத்தி பேசியுள்ளது.
இதுகுறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் பேசுகையில், அரசின் இந்த உத்தரவு அமைதியை உறுதிசெயவும், யாத்திரைக்கு பாதிப்பில்லாத வகையில் சீராக நடத்தவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவே ஆகும். தவறுதலாகக் கூட கன்வர் யாத்ரீகர்களின் மத நம்பிக்கை புண்பட்டுவிடக்கூடாது என்பதற்காவதும், முந்தைய காலங்களில் நடந்த சில அசௌகரியங்களை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கன்வர் பயணம் மேற்கொள்ளும் பல யாத்திரீகள், கடைகள் மற்றும் உணவாகங்களின் பெயர்கள் தங்களைக் குழப்புவதாக அரசிடம் புகார் தெரிவித்திருந்தனர். அந்த புகார்களுக்கு உரிய நடவைடிக்கை எடுக்கும் பொருட்டே இந்த உத்தரவை அரசு பிறப்பித்ததாக தனது வாதத்தை முன்வைத்தார்.
மேலும் உணவகங்களில் அசைவம் சமைக்கக்கூடாது என்று நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பெயரை கடை முன்னாள் எழுத வேண்டும் என்று மட்டுமே கூறியிருந்தோம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.