₹21 லட்சம் வரதட்சணை கேட்டு பெண் அடித்துக்கொலை - கணவர் கைது
- கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம்
- விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர்
உத்தரபிரதேசத்தில் 2022 டிசம்பரில் கரிஷ்மா என்ற பெண் விகாஸ் என்பவரை திருமணம் செய்தார். பின்பு இந்த ஜோடி கிரேட்டர் நொய்டாவில் உள்ள விகாஸ் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வரதட்சணை கொடுமையால் கரிஷ்மா அவரது கணவர் மற்றும் கணவரது குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக கரிஷ்மாவின் சகோதரர் தீபக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம். ஆனால், விகாசின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக இன்னும் அதிக வரதட்சணை கேட்டு கரிஷ்மாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கரிஷ்மாவிற்கு ஒரு பெண் குழந்தையைப் பிறந்துள்ளது. அதன்பிறகும் விகாஸ் குடும்பத்தினரின் அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். அதனால் கரிஷிமாவின் குடும்பத்தினர் விகாஸ் குடும்பத்திற்கு கூடுதலாக ₹10 லட்சம் கொடுத்தனர். அதன்பின்பும் இந்த கொடுமை முடிவுக்கு வரவில்லை.
அண்மையில், விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதனை கரிஷ்மா குடும்பத்தினரால் கொடுக்கமுடியவில்லை.
இந்நிலையில், மார்ச் 29 அன்று கரிஷ்மா எங்களை தொடர்பு கொண்டு விகாஸ் குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்தார். உடனே நாங்கள் விகாஸ் வீட்டிற்கு சென்று பார்க்கையில் கரிஷ்மா இறந்து கிடந்தார். கரிஷ்மாவை அவரது கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரில், விகாஸ், அவரது தந்தை சோம்பல் பதி, அவரது தாய் ராகேஷ், சகோதரி ரிங்கி மற்றும் சகோதரர்கள் சுனில் மற்றும் அனில் ஆகியோர் மீது வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் விகாஸ் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.