இந்தியா

கர்நாடகா: மீட்டர் வட்டி கொடுமையால் 3 குழந்தைகளை கொன்று கணவன்- மனைவி தற்கொலை

Published On 2023-11-27 04:37 GMT   |   Update On 2023-11-27 04:37 GMT
  • கரீப் சாப் என்பவர் கறிக்கடை நடத்தி வந்தார். கடையில் கிடைக்கும் வருமானம் அவருக்கு போதுமானதாக இல்லை.
  • கரீப் சாப் தனக்கு தெரிந்தவர்களிடம் மீட்டர் வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.

கர்நாடக மாநிலம் தும்கூர் சதாசிவா நகரை சேர்ந்தவர் கரீப் சாப் (32). இவரது மனைவி சுமையா (30). இவர்களுக்கு ஹாஜிரா (14) என்ற மகளும், முகமது சுபான் (10), முகமது முனீப் (8) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

கரீப்சாப் அந்த பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். கடையில் கிடைக்கும் வருமானம் அவருக்கு போதுமானதாக இல்லை. இதனால் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில் கரீப் சாப் தனக்கு தெரிந்தவர்களிடம் மீட்டர் வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வியாபாரம் சரியாக நடக்காததால் கரீப் சாப்பால் வாங்கிய கடனுக்கு சரியாக வட்டி செலுத்த முடியவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு அவருக்கு தொல்லை கொடுத்தனர். பணத்தை செலுத்த முடியாத கரீப் சாப் தனது மனைவியிடம் இதுகுறித்து தெரிவித்து உள்ளார். பின்னர் கணவன், மனைவி 2 பேரும் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி சம்பவத்தன்று இரவு கரீப்சாப் மற்றும் அவரது மனைவி சுமையா ஆகியோர் உணவில் விஷம் கலந்து தனது 3 குழந்தைகளுக்கும் கொடுத்தனர். உணவில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் சாப்பிட்ட 3 குழந்தைகளும் படுக்க சென்றனர். பின்னர் தூக்கத்திலேயே அவர்கள் பலியானார்கள்.

இதையடுத்து கரீப்சாப் செல்போன் மூலம் ஒரு வீடியோ எடுத்தார். அதில் கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் விரக்தி அடைந்த நான் 3 குழந்தைகளை விஷம் வைத்து கொன்று விட்டு நானும், எனது மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று தெரிவித்து இருந்தார். மேலும் கடன் கேட்டு தொல்லை கொடுத்த சிலரது பெயர்களையும் தெரிவித்து இருந்தார். 5 நிமிட வீடியோவாக எடுத்து அதை உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதோடு இல்லாமல் 2 பக்கத்தில் உருக்கமான கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார்.

பின்னர் கரீப் சாப் மற்றும் அவரது மனைவி சுமையா ஆகியோர் வீட்டின் ஹாலில் முகத்தை துணியால் மூடி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தெரிய வந்ததும் திலக்பார்க் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கரீப் சாப் வெளியிட்ட வீடியோ மற்றும் உருக்கமான கடிதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.1 லட்சம் கடன் தொல்லைக்கு பயந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News