கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் எதிரொலி: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- பெங்களூரு, மண்டியா, மைசூரு, துமகூரு, ராமநகர், ஹாசன், பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், குடகு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டது.
- பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது.
பெங்களூரு:
காவிரி ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடுவதற்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் முழு அடைப்பை நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும், சங்கங்கள் உள்ளிட்ட 1,900 அமைப்புகள் ஆதரவு தெரிவித்தது.
இதையடுத்து கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் தலைநகர் பெங்களுருவில் பேரணிகள் நடத்தவும் எந்த அமைப்புக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.
போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின்படி 5 பேருக்கு அதிகமானவர்கள் ஒரே இடத்தில் கூடக்கூடாது. அதோடு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தாலோ அல்லது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தாலோ பந்த் நடத்தும் அமைப்பின் நிர்வாகிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி அமைப்பின் நிர்வாகிகளுக்கும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் தடை உத்தரவை மீறியும் பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை போலீசார் என 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்களூரு, மண்டியா, மைசூரு, துமகூரு, ராமநகர், ஹாசன், பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், குடகு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டது. ஆட்டோ, வாடகை கார்கள், டாக்சிகள் ஓடவில்லை. பெங்களூருவில் கடைகள், ஓட்டல்கள், திரையரங்குகள், வர்த்தக நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் மூடப்பட்டது. பெங்களூருவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வழக்கம்போல் பால், மருந்து கடைகள், ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி அத்தியாவசியம் என்பதால் திறக்கப்பட்டு இருந்தது.
கர்நாடகத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பு காரணமாக கல்லூரிகளில் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இன்று பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான 2-வது மற்றும் 4-வது செமஸ்டர் தேர்வுகள் அக்டோபர் மாதம் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பெங்களூரு உள்பட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் காந்தி நகர், ஸ்ரீராமபுரம், சிவாஜிநகர், மாகடி ரோடு, அல்சூர், இந்திரா நகர் உள்பட பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்து வாகனத்தில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரமாக தொடங்கி உள்ளனர். மேலும் ஓசூர்-பெங்களூரு எல்லையான எலெக்ட்ரானிக் சிட்டி, சில்க் போர்டு, மடிவாளா, மாரத்தஹள்ளி, பிடிஎம் லே அவுட் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு தமிழக அரசு விரைவு பஸ்கள் நேற்று நள்ளிரவு முதல் இயக்கப்படவில்லை.
இதேபோல் சேலம் மேட்டூரில் இருந்து பாலாறு வழியாக கர்நாடக செல்லும் பஸ்கள், சேலத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் பஸ்கள், கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு செல்லும் பஸ்கள், தர்மபுரி, ஈரோடு பகுதியிலிருந்து செல்லும் பஸ்கள் அனைத்தும் தமிழக எல்லை பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டன.
லாரிகள் மற்றும் கண்டெய்னர் லாரிகள் அனைத்தும் ஓசூர் எல்லை, மேட்டூர் அருகே உள்ள எல்லை, ஈரோடு தாளவாடி எல்லையில் டிரைவர்கள் வரிசையாக நிறுத்தி இருந்தனர். வேலைக்கு செல்பவர்கள் தமிழக சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெங்களூரு செல்வதற்கு வந்த இலகு ரக வாகனங்களும் தமிழக எல்லையில் பேரிகார்டர் வைத்து தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டன. எல்லையில் தமிழக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.