இந்தியா

உ.பி.யில் 40 இடங்கள் எங்களுக்குத்தான்: டி.கே. சிவகுமார்

Published On 2024-05-17 10:29 GMT   |   Update On 2024-05-17 10:29 GMT
  • கடந்த முறையை விட அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம்- அமித் ஷா
  • உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் எங்களுடைய கூட்டணி நல்ல நிலையில் உள்ளது- டி.கே. சிவகுமார்

மக்களவை தேர்தலில் 400 இடங்கள் இலக்கு நிர்ணயித்து பா.ஜனதா களம் இறங்கியுள்ளது. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் பா.ஜனதாவுக்கு அவ்வளவு இடம் கிடைக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

கள நிலவரம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இல்லை. இதனால்தான் பிரதமர் மோடி விரக்தியில் இந்து-முஸ்லிம் குறித்து பேசுகிறார் என விமர்சிக்கின்றனர்.

அதேவேளையில் 3-வது முறையாக பிரதமராக தேர்ந்ததெடுக்கப்பட்ட பின், முதல் 100 நாள் திட்டத்திற்கான வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்து வருகிறார்.

கடந்தமுறை உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா 65 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை அதைவிட அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என அமித் ஷா உறுதியாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நாங்கள் (இந்தியா கூட்டணி) 40 இடங்களில் வெற்றி பெறுவோம் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டி.கே. சிவகுமார் கூறுகையில் "உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் எங்களுடைய கூட்டணி நல்ல நிலையில் உள்ளது. நாங்கள் 40 இடங்களில் வெற்றி பெறுவோம். எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தேன். அப்போது எங்கள் கட்சியின் வாக்குறுதிகள் பற்றி குறிப்பிட்டேன்

ஏழை மக்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக 10 கிலோ இலவச ரேசன் வழங்கப்படும் என கார்கே மேலும் அறிவித்துள்ளார். ஆகவே, முடிவுகள் எங்களுக்கு சாதமாக இருக்கும்.

இவ்வாறு டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News